தூம் – 03 + பிரியாணி + Swann

­ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது! இம்முறை, அமீர்கானுக்காகவும், வெங்கட்பிரபுவுக்காகவும் ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் பார்த்தாகிவிட்டது. அவை பற்றி......



தூம் சீரிஸ் திரைப்படங்கள் என்பது, ஒரே வகையான திரைக்கதையில் வேறுவேறு நடிகர்களை வைத்து திரைப்படமாக்குதல் என்றே எண்ணத் தோன்றுகிறது. என்ன, இணைந்து நடிக்கும் நடிகர்களின் பிரமாண்டம் மற்றும் அள்ளி இறைத்திருக்கும் பணத்தினால் உருவாக்கியிருக்கும் பிரமாண்டம் எல்லாமே இந்தவகை திரைப்படங்களை இருநூறுகோடிக்கு மேலே வசூல் செய்யவைத்துவிடும்.

அமீர்கான் நடிப்பார் என்றும், கத்ரீனா கைப் காட்டுவார் என்பதையும் நிரூபிப்பதற்கு தூம் - 03 திரைப்படம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்களின் நடிப்பும், கிளாமரும் இந்தவகையான திரைப்படங்களின் வெற்றிக்கு பயன்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இவர்களுடன், வழமையான அபிஷேக்பச்சனும் திரைப்படத்தை திருடனை கோட்டைவிடும் இந்தியாவின் திறமையான பொலிஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

திரைக்கதையை பொறுத்தவரையில், படம் பார்க்க வரும் இந்தியர்களை உருகவைக்க கொஞ்சம் சென்டிமென்ட், இளசுகளை வாயைபிளக்க வைக்க கத்ரீனா + ஆக்சன் காட்சிகள் , படத்தில் ட்விஸ்ட் இல்லையா ? என்று சிந்திக்கும் விமசகர்ளுக்கு இடைவேளைக்கு முன்பு ஒரு ட்விஸ்ட் ட்ரீட் என்று 23 கோடியில் படம் காட்டி இருக்கிறார்கள்


  • #Dhoom3 - இதுவரை வெளியான ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கலவை

அப்படியே, தூம் -03 பார்த்துவிட்டு, வெங்கட்பிரபுவின் பிரியாணியை பார்க்கப்போனால், சுடச்சுட சுவையான பிரியாணியை கொஞ்சம் கழுவாத தட்டில் பரிமாறி இருக்கிறார். அந்த பிரியாணியை சாப்பிடும்போது, கழுவாத தட்டில் சாப்பிடும் போது, எப்படி அந்தரமாக இருக்குமோ, அப்படியே திரைப்படம் முழுவதையும் பார்க்கும்போது இருக்கிறது.

சுவாரசியமான ஆங்கிலகதைகளை அப்படியே, சுவைகெட்டு விடாமல் தமிழுக்கு கொண்டுவருவதில் வெங்கட்பிரபுவை அடுத்த கமலஹாசன் என்றே சொல்லலாம். என்ன, இப்படி சுட்டு படமெடுத்துவிட்டு, இதற்கு விருது தராதற்கு என்ன காரணம் ? என்று விஜய் விருது வழங்கல் விழாவில், வெட்கமே இல்லாமல் கேள்வி கேட்பார். நாமும் அதைபற்றி வெட்கமே இல்லாமல் சமூகத்தளங்களில் பேசிக்கொண்டிருப்போம்.

சரி திரைக்கதை என்னவென்று பார்த்தால், சொல்லப்போய் நானே குழம்பிவிடுவேன். அந்தளவுக்கு படத்தில் ட்விஸ்ட் வைத்து அதகளபடுத்தி இருக்கிறார். இதுவே, நிறையபேரை குழப்பிவிடும். பேசாமல், கொஞ்சம் ட்விஸ்ட்களை சேமித்து அடுத்த படத்துக்கு பயன்படுத்தி இருக்கலாம். படத்தில், பிரேம்ஜிதான் ஹீரோ. தனது பணியை அண்ணன் திரைப்படத்தில் மட்டுமே சரியாக செய்கிறார். துணை ஹீரோவாக வரும் கார்த்தி, பிரேம்ஜியை நடிப்பில் முந்த போராடி இறுதிக்காட்சியில் ஹீரோவாக வெற்றி பெறுகிறார். படத்திற்கு தேவையான பாடலை மட்டும் விட்டுவிட்டு, மீதிபாடல்களை தூக்கி இருக்கலாம். யுவன் தனது நூறில் சொதப்பி இருக்கிறார் (முழுதாக இல்லை).வெங்கட்பிரபு இப்படியான படங்களையே எடுக்கட்டும். அப்போதுதான், உலகசினிமாவை எங்கள் தெருவின் எல்லைவரை தெரிந்த மொழியிலேயே கொண்டு சேர்க்கமுடியும். என்ன, கமல்ஹாசன் போல, உலகசினிமாவை உலகசினிமாவாக எடுக்காமல் லோக்கல் சினிமாவாக எங்களுக்கு பிடித்தது போல எடுத்தாலே போதும்.

Swann

ஆஷஸ் என்பது இங்கிலாந்து நாட்டுக்கும் , ஆஸ்திரேலியா நாட்டுக்கும் இடையிலான துப்பாக்கிகள் பேசிக்கொள்ளாத போர்! அந்த போரில், மானம்தான் ஊடகங்களால் காவுகொள்ளப்படுமே தவிர உயிர்கள் அல்ல! அப்படி இருந்தாலும், இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்போட்டிகள் சில நல்ல வீரர்களை கிரிக்கெட்டிலிருந்தே காவுகொண்டு விடும். இம்முறை, அந்த சுழலுக்குள் சிக்கியிருப்பவர் இங்கிலாந்தின் ஒரு சில சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கிரேகம் ஸ்வான்.

என்னதான், உடல் ஒத்துகொள்ளவில்லை என்று ஓய்வுக்கு காரணங்கள் சொன்னாலும், ஓய்வில் ஆஷஸ் தொடரின் ஆதிக்கம் அப்பட்டமாகவே தெரிகிறது. இனி ஸ்வான் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்தின் அணித்தலைவருக்கு மேலும் அழுத்தம் அதிகரிக்க போகிறது என்பதே உண்மை. அத்துடன், இனி மொண்டி பனசரை அல்லது ட்ரேட்வெல் ஆகியோரை நம்பி இங்கிலாந்து பயணிக்கபோகிறது. இந்தநிலை குறுகியகாலத்திற்குத்தான். காரணம், இந்த வீரர்களின் வயது. எனவே, இங்கிலாந்து அடுத்த தலைமுறை சுழல்பந்துவீச்சாளரை தேடவேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனாலும், கிரேகம் ஸ்வான் விடைபெறும்போது, அடுத்த தலைமுறை சுழல் பந்துவீச்சாளர் ஒருவரை அடையாளம் காட்டிவிட்டே சென்று இருக்கிறார். அவர் 23 வயது நிரம்பிய Scott Borthwick.



கிரேகம் ஸ்வான் இங்கிலாந்து அணியிலிருந்தது சுழல் பலமா? பலவீனமா ? என்பது போகப்போகத்தான் தெரியும்! 

Comments