நயன்தாராவுக்காக “எதிர் நீச்சல்”


சிவகார்த்திகேயன் பற்றி அறிந்திருக்காதவர் யாருமில்லை. ஒரு கலைஞனாக அவரை தெரிந்துகொண்டவர்களுக்கு, அவருக்கு பின்னாலிருந்த துயரத்தையும், லட்சியத்தையும் வெளியே கொண்டு வந்தது நடிகர் சூர்யா கலக்கி கொண்டிருந்த லட்சாதிபதி நிகழ்ச்சிதான். எவ்வாறு பல கஷ்டங்களுக்கு மத்தியிலும், ஒரு மிமிக்கிரி கலைஞனாகவும், நடிகராகவும் பரிணாமிக்க கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டிருக்க முடியும். இதை எல்லாம் தாண்டி, அப்பா என்கிற உறவில் அதிகமாகவே ஈர்க்கபட்ட ஒருவர். இது அவர் ஹீரோவாக நடித்த எல்லா படங்களிலுமே மெல்லிய இழைபோல இழைக்கபட்டது போலவே இருக்கும். சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் எப்படி இருந்தாரோ? அதைப்போலவே, அவரது அறிமுக திரைப்படங்களிலும் நகைச்சுவை இருந்ததினால், தனியாக ஹீரோவாக நடிக்கின்ற போது, அந்த காமடியனை தாண்டி நடிப்பதில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல் ஏராளம் என்பதை, எதிர்நீச்சல் திரைப்படம் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளலாம்.

இந்த திரைப்படத்தின் கதை தன்னுடைய அடையாளத்தை பதிவுசெய்துகொள்வதற்காக ஒரு இளைஞன் போடும் எதிர்நீச்சலே! இந்த எதிர்நீச்சல் வெற்றிகரமாக அமைந்ததா? இல்லையா? என்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியதே! J

பலருக்கும் பரம்பரை பெயர், குலதெய்வத்தின் பெயரை வைக்கிறோம் என்று இந்தியாவில் விசித்திரமான பெயரை வைத்துவிடுவார்கள். (இலங்கையில் அப்படி நடப்பது குறைவு என்றே நினைக்கிறேன்.) அப்படி தனக்கு வைக்கபடும் ஒரு பெயரினால் அன்றாட வாழ்க்கையில் அவமதிப்புக்குள்ளாகும் இளைஞனான சிவகார்த்திகேயன் எப்படி தனது அடையாளத்தை மாற்றியமைத்துகொள்ள போராடுகிறார் என்பதில் தொடங்கும் கதையில் வழமையான மசாலா கலவையையும் உள்ளடக்கி தந்து இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். திரைப்படம் முழுக்க நிறையவே பிரபலமான கதாபாத்திரங்கள் சின்ன சின்ன வேடத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரையும் கோர்த்து ஒரு திரைப்படத்தை கொடுக்கப் போகிறமா? அல்லது விவரண திரைப்படம் கொடுக்க போகிறமா? என்பதில் கொஞ்சம் குழம்பி, இறுதிக் காட்சிகளில் ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டிய ஒரு சிறந்த கிளைமக்ஸ் காட்சியையும் தவறவிட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயனிடம் வழமையான நக்கல், நையாண்டிகளை எதிர்பார்க்க முடியவில்லை. அசல் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்று இருக்கிறார். நடனம் ஆடவும் செய்கிறார். பல இடங்களில் சூப்பர் ஸ்டார் சாயலில் நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். கதாநாயகி பிரியா ஆனந்த் மற்றும்  நந்திதா தமக்கென்று வழங்கப்பட்ட கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்கள். நல்ல நடிகைகளுக்கு வாய்ப்புக்கள் குறைவாகவிருப்பது கவலைதான். இவர்களை எல்லாம் தாண்டி, மனதில் நிற்பவர்கள் ஜெய் பிரகாஷ் மற்றும் நந்திதாவின் தந்தையாக வருபவரும்தான். நடிப்பில் பின்னியேடுத்திருக்கிறார்கள். இப்படி குட்டிக் குட்டியாக நிறைய கதாபாத்திரங்களை படத்தில் வைத்து, முதல்பாதி கதையை சுவாரசியப்படுத்திய இயக்குனரின் மிகப்பெரிய பலம் என்றால், இடைவேளைக்கு பிறகு அந்த சுவாரசியத்தை எப்படி கொடுப்பது என்பதில் தடுமாறியதுதான் எதிர்நீச்சல் படத்தின் மிகப்பெரிய பலவீனமாக மாறிப்போய் விட்டது.

அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் அனிருத்துக்கு அனுபவம் தேவை என்பதை படம் பார்க்க்கும் போதே தெரிந்துகொள்ள முடியும். ஒரு பாடல்காட்சியில் தனுஷ், அனிருத் மற்றும் நயன்தாரா தோன்றி ஆடியிருக்கிறார்கள். நயன்தாரா இன்னமும் தனது கையில்(மட்டும் தான் என்று நினைக்கிறேன் :P ) பிரபு என்கிற பெயரை பச்சை குத்திக்கொண்டுதான் வலம்வருகிறார். நடன காட்சியில் இன்னமும் அந்த பழைய அழகு குலையாமல் வந்துபோகிறார். அவரது அடுத்தடுத்த படங்களுக்கு இது சின்ன ட்ரைலர் என்றே நினைக்கிறேன்.

படத்தில் இன்றைய இந்தியாவின் குறைபாடான சில விடயங்களையும், திறமையாளர்களின் திறமைகள் எப்படி மறுக்கப்படுகின்ற என்கிற விடயங்களை போட்டு உடைத்திருக்கிறார்கள். இந்த நிலை இப்போது நம்ம நாட்டிலும் இருப்பது கவலைதான். எதிர்நீச்சல் குழு கொடுக்கவேண்டிய கதையை சுவாரசியமாக வைத்துக்கொண்டு, அதை காட்சிபடுத்துவதில் தவறியதுதான் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சலிப்பான உணர்வை தரக்காரணமாக அமைந்துவிட்டது எனலாம். தனுஷ் தயாரிப்பில், முதலாவது திரைப்படமே நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படமாக உள்ளபோதிலும், என்ன காட்சிபடுத்தில் கொஞ்சம் சொதப்பி இருக்க்கிறது. மொத்தத்தில் இந்த திரைப்படம் எல்லோருக்கும் ஒரு எதிர்நீச்சல் தான்!

எதிர்நீச்சல் - நடுக்கடலில் தத்தளிக்கும் படக்குழுவுக்கு தனுஷ் கூட திரையில் தோன்றி கைகொடுத்து பார்த்திருக்கிறார். நீந்தி கரைசேர்வது சிரமம்தான்!

Comments