கேடி பில்லா கில்லாடி ரங்கா

கறுப்புவெள்ளை திரைப்படகாலத்தில் நகைச்சுவைக்கு என்றே தனியாக திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தது. அந்தநிலை ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம்பெறும் வரை தொடர்ந்துகொண்டேயிருந்தது எனலாம். பின்பு, கமல்ஹாசன் அவ்வப்போது நகைச்சுவை திரைப்படங்கள் மூலம் அதன் இருப்பை காட்டிகொண்டேயிருந்தார். இடையில், எஸ்.வி.சேகர், முரளி, கிரேசி மோகன் என்று பலர் வந்துபோயிருக்கிறார்கள். ஆனால், தனித்து நகைச்சுவை திரைப்படங்களை தொடர்ச்சியாக தந்திருக்க முடியவில்லை. அவர்களுக்கு பிறகு, தொடர்ச்சியாக நகைச்சுவை திரைப்படங்களின் வருகைக்கு ஒரு Trend உருவாக்கி வைத்தவராக  இயக்குனர் ராஜசேகரை சொல்லலாம். கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் போல, கதைக்கு இரட்டை கதைநாயகர்களை வைத்துக்கொண்டு லாஜிக் இல்லாமல் வயிற்றை நகைச்சுவையால் நோகடித்து, வசூலில் சாதனைபடைக்கும் தந்திரத்தை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்திருந்தார். அந்த தொடர்வரிசையில் இயக்குனர் பாண்டிராஜ் தந்திருக்கும் திரைப்படம்தான் இந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா.
 

கேடி பில்லா கில்லாடி ரங்கா தொடங்கியது முதலே, கதையின் நாயகர்களும் கதையும் பேசத்தொடங்கி விடுகிறது. ரசிகர்கள் சிரிக்க தொடங்கிவிடுகிறார்கள். என்னடா! படம் தொடங்கியதிலிருந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்களே என்று சிரிப்பு மாயையில் அலுப்பு தட்டத் தொடங்கும் போது, இடைவேளை போட்டு தங்களையும், ரசிகர்களையும் காப்பாற்றி கொள்ளுகிறார்கள். பிறகு, இடைவேளைக்கு பின் கொஞ்சம் வித்தியாசமாக பேசியும், செயலில் இறங்கியும் சிரிக்கவைக்கிறார்கள், பின்பு, திரைப்படம் முடியப்போகிறது என்றதும், ரசிகர்களை குறுகிய நேரத்தில் தொடக்கூடிய மெசேஜ் சொல்லி படத்துக்கு சுபம் போட்டு, ரசிகர்கள் மனதில் பீல் குட் திரைப்படம் என்கிற பெயரை வாங்கிவிடுகிறார்கள் திரைப்பட இயக்குனர் பாண்டியராஜ், நாயகர்கள் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் இவர்களுடன் நகைச்சுவைநடிகர் “பரோட்டா” சூரி.

வேலைக்கு போகாமலும், வீட்டில் உள்ளவர்களையும் மதிக்காமல் இரண்டு நாயகர்கள், இவர்களுடன் மாமனாரை நம்பி அவர் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நகச்சுவை நடிகர். இவர்கள் ஒன்று சேர்வதற்கு ஒரு இடமாக, ஒரு புகையிரத நிலையம். கதாநாயகர்கள் எப்படி நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். இவை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இயக்குனர் பாண்டிராஜ் இனி நடக்கபோகும் கதையை சொல்லவருகிறார். விமல், சிவகார்த்திகேயன் இருவருக்குமே அரசியல்வாதியாக வேண்டுமென்ற எண்ணம். அதற்காகவே, ஒரு பிரபல அரசியல்வாதிக்கு பின்னால் அடிப்போடிகளாக இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்துகொண்டு இருப்பவராக சூரி. இவர்களை காதலிக்கும் கதாநாயகிகளாக பிந்து மாதவி மற்றும் ரெஜினா. இவர்களை கொண்டமைந்த கதையில் நாயகர்களின் லட்சியம் நிறைவேறியதா? கதாநாயகிகளுடன் இணைந்தார்களா? என்பதை கலக்கல் நகச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள்.

கதையில் உணமையான கதாநாயகன் சிவகார்த்திகேயன் தான். என்னதான் விமல் பிரபலமான நாயகர் என்றபட்டத்துடன் படத்தில் இருந்தாலும், அவரை படத்தில் எல்லா காட்சிகளிலும் பின்தள்ளிவிட்டு முன்னால் வருபவர் சிவாதான். சிவா நகச்சுவையில் கலக்குகிறார். தேவையான இடத்தில் அளவாக உணர்ச்சிகளை கொட்டுகிறார். காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் தேவையானவராக இருக்கிறார். விமல் என்னமும் கிராமத்து இளைஞன் நினைப்பிலிருந்து வெளிவரவில்லை. அவர் இப்படியேஇருந்தால், இனி சிவா படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடிக்கவேண்டிய காலமும் வரலாம். பார்த்துகொள்ளுங்கள் விமல். படத்தில் இவர்களுடன் மூன்றாவது கதாநாயகன் என்று சொன்னால் அது “பரோட்டா” சூரி. நகைச்சுவையில் டைமிங் சென்ஸ் உள்ளவர்களில் இவரும் ஒருவர். சிவா பேசும் காட்சிகளில் கவுண்டர் வசனங்கள் பேசி ரசிகர்கள் கைதட்டலை பெற்றுக்கொள்ளுகிறார். கதாநாயகிகளாக ரெயினா மற்றும் பிந்துமாதவி. இவர்களில் ரெயினா நிச்சயம் ரசிகர்கள் மனதை அள்ளிக்கொள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை. சிவாவுக்கு ரெயினா போன்ற நாயகிகள் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், இருவரும் வருகின்ற காட்சிகளில் எல்லாம் சிரிக்கவைக்கிறார்கள். அதுபோல, பிந்துமாதவி கோமாளித்தனமான நாயகியாக வலம் வருகிறார். ரசிகர்கள் மனதைக்கொள்ளை கொள்வாரா? என்பது சந்தேகமே!

பசங்க படம் தந்த பாண்டிராஜ்ஜின் வித்தியாசமான முயற்சி இது என்றே சொல்லலாம். இந்த முயற்சியில் வெற்றியும் பெற்று இருக்கிறார். இவருடன் இந்த படத்தை பார்க்ககூடியவகையில் காட்சிபடுத்திய பெருமை ஒளிப்பதிவாளர் அத்தியப்பன் சிவாவை சேரும். பொருத்தமான இடங்களை தேர்ந்தெடுத்து காட்சிபடுத்தியிருக்கிறார். இசையில் நீண்டநாட்களுக்கு பிறகு, யுவன்சங்கர்ராஜா அதிரடி டான் இசை இல்லாமல் மெல்லிய இசை மூலம் வருடியிருக்கிறார். இப்படியான இசையையும் யுவனிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர் மறக்கவில்லை என்பதை ரசிக்கவைக்கும் பாடல்கள் மூலம் நினைவூட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

படம் முழுவதும் பரவியிருக்கும் நகைச்சுவை படத்தில் உள்ள சில குறைகளையும், படத்திலிருக்கும் சில சாதாரண நிகழ்வுகளுக்கு புறம்பான காட்சிகளையும் மறைத்தேயிருக்கிறது. பாண்டிராஜ் போன்ற இயக்குனர்கள் திரைப்படத்தில் இப்படியான குறைகள்லிருப்பதும் ஆச்சரியமானதே! இவையில்லாமல்,  சிவகார்த்திகேயன் தன்னுடைய நகைச்சுவை ஹீரோ என்கிற நிலையை இந்த திரைப்படத்திலிருந்து மாற்றிக்கொள்ளுவது நல்லது. இல்லையேல், தமிழ் சினிமா நல்ல நடிகனை தனது வர்த்தகத்துக்கு இப்படியே பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிந்துவிடும். பாண்டிராஜ் நகச்சுவை திரைப்படம் எடுப்பதில் ஜெயித்து இருக்கிறார் என்றாலும், அவருக்கு ஓட்டாத திரையில் கால்பதித்து இருக்கிறார் என்கிற பயத்தை அவர் இறுதிக்காட்சிகளில் தூவிவிட்டிருக்கும் சென்டிமென்ட் காட்சிகளே உதாரணம்.
ஒன்பதுல குரு, கருப்பம்பட்டி போன்ற மொக்கையான நகைச்சுவை திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி மீண்டும், நகைச்சுவைக்கு என்றே தனியாக வெளிவரும் திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போக்கிவைத்திருக்கிறது. இப்படியான பீல் குட் திரைப்படங்கள் நிச்சயம் நகைச்சுவை திரைப்படங்களை வாழவைக்கும் என்று நம்பலாம். 

Comments