அமீரின் ஆதி – பகவன்



பல ஆண்டுகளாக கிடப்பிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் திரைப்படம். விஸ்வரூபம் திரைப்படத்துக்கு பிறகு, முன்னணி இயக்குனர்கள் எல்லாம், படத்தில் பல காட்சிகளை சுதந்திரமாக வைக்கமுடியாமல் திண்டாடுகிறார்கள் என்பதற்கு, இந்த திரைப்படத்துக்கு முன்பு, அமீர் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் சில எழுத்தோட்டங்கள் சான்று. முட்டையில் மயிர் புடுங்க பலரும், ஹிட் பதிவுகளுக்காக சிலரும் இருக்கிறபோது இப்படியான கஷ்டங்களும், குஷ்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கத்தான் போகிறது. விஸ்வரூபத்துக்கு பிறகு, அதிக சர்ச்சைக்குள் சிக்கியமையும், இனி பல ஆண்டுகளாக இழுத்தடித்து எடுக்கபட்ட காட்சிகளை மீள எடுக்கவும் முடியாமல், வெளியீடு செய்வதற்கு “A” சான்றிதழ் தந்தால் கூட பரவாயில்லை என்ற நிலையில், அமீர் அந்த சான்றிதழையும் வாங்கிகொண்டு படத்தை வெளியீடு செய்து இருக்கிறார். இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி, வெளிவந்திருக்கும் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? இல்லையா? என்பதுதான் முக்கியம்.

ஆரம்பத்தில், சாதா ஆதிபகவன் ஆகவிருந்து, வெளியிடும்போது, அமீரின் ஆதி-பகவன் என்று மாற்றம் பெற்றதுதான், படத்துக்கு நூறுவீதம் பொருத்தமாக இருக்கிறது. முழுமையாகவே, அமீரின் படம்தான். ஆரம்பத்தில், இரண்டுவரி கதையை எழுதிவிட்டு, வீட்டிலிருந்து, ரசிகர்கள் பாத்திராத பல ஹாலிவுட் திரைப்படங்களை எல்லாம் பார்த்து, ஒவ்வரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார் இயக்குனர். கூடவே, அமீர் என்னுமொரு விடயத்தில் தீர்மானமாக இருந்திருக்கிறார். இந்த படத்தில் பருத்திவீரன், ராம் திரைப்படங்கள் போல, தன்னை இந்தியாவுக்குள் மட்டும் அடக்கிகொள்ளாமல், ஒரு உலக சுற்றுலா போய், இதை ஹாலிவுட் திரைப்படமாக்கி கொள்ள முயன்றிருக்கிறார். அதாவது, இதை அமீரின் கிழக்காசிய சுற்றுலா என்ற சொல்லலாம். மற்றையது, இந்த திரைப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்யவேண்டும் என்பதை படத்தின் இடைநடுவேதான் அமீர் உணர்ந்திருப்பார் போல, படத்தில் ஹீரோ – ஹீரோயின் பேசிகொள்ளுவதை தவிர்த்து பெரும்பாலான காட்சிகள் அனைத்தும், வெற்றுமொழியில்தான் இருக்கிறது. முக்கால்வாசி நேரம் புரியாத மொழியை புரிந்துகொள்ள SUBTITLEஜ பார்த்தே நேரத்தை செலவிடவேண்டியிருக்கிறது. அமீர் இதை வெறுமனே ஆங்கில படத்தின் பிரதி என்று சொல்லிவிடகூடாது என்பதற்காக, இரண்டு கதாபாத்திரங்களை வைத்திருக்கிறார். அவர்கள் ஜெயம் ரவி & நீதுசந்திரா கூட்டணி.

படத்தின் கதையென்று பார்த்தால், பாங்காக் தாதா ஆதிசண்முகம் என்கிற ஜெயம் “ரவி” பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர். ஒருமுறை, பணத்துக்காக இந்தியாவின் கேரளாவில் (அப்படித்தான் நினைக்கிறேன்) அரசாங்க அதிகாரிபோல வேடமிட்டு, ரெய்டுக்காக போய் பணத்தை கொள்ளையிட்டு கொண்டு வந்துவிடுகிறார். அப்படி கொள்ளைக்கு போய் வந்தபின்பு, தானே இந்த தொழிலுக்கு ராஜா ஆகவேண்டும் என்ற எண்ணம் வருகின்ற போது, தனக்கான பங்கை அதிகமாக தருமாறு கேட்டு , கூட்டு வில்லன் பகையையும் தேடிகொளுகிறார். இதற்க்கு நடுவே, அம்மா சென்டிமென்ட், பாங்காக் தாதாவாக மாறியமைக்கு ஒரு பிளாஷ்பேக், நீதுசந்திராவுடன் ஒரு காதல் என்று நேரம் கடந்துபோக, மறுபக்கத்தில் பணத்தை இழந்த கேரளா பணக்கார தாதாக்கள் தங்கள் பணத்துக்காக ஜெயம்ரவியை தேட, மும்பையில் ஒரு பொலிஸ் அதிகாரி எங்களுக்கு காரணம் சொல்லாமல் ஜெயம் ரவியை தேட, கூட்டு வில்லனும் தன்பங்குக்கு ஜெயம்ரவியை போட்டுத்தள்ள காத்துக்கொண்டிருக்கிறார். இதற்க்கு இடையில், நீதுசந்திரா ஒரு கடத்தல் வியாபாரத்தின்போது, உயிருக்கு ஆபத்துநிலையிலிருக்கும் ஜெயம்ரவியை கூட்டு வில்லனிடமிருந்து காப்பாற்றி, அவர்மனதில் தனது இடத்தை உறுதிசெய்கிறார். இடைவேளைக்கு முன்னதாக, ஜெயம்ரவியை காதலிக்கும் நீதுசந்திரா தனது அப்பா மும்பையில் இருப்பதால், அவரை பார்க்கவென அழைத்து சென்று, மும்பையில் வைத்து தான் ஜெயம் ரவியை காதலிக்கவில்லை என்று, சொல்ல்வதுடன், மும்பையில் தேடிகொண்டிருக்கும் பொலிஸ்ஸிடம் ஒப்படைத்துவிடுகிறார். இரெண்டாம் பாதியில், இந்த புரியாத குழப்பங்களுக்கு எல்லாம் பதில்சொல்லி முடிவுக்குகொண்டுவருவதற்காக, யாரும் எதிர்பார்க்காத என்னுமொரு ஜெயம்ரவி காதாபாத்திரத்தையும் அறிமுகம்செய்து, சுபம் கொடுக்கிறார் இயக்குனர் அமீர்.

படத்தில் பெயருக்குத்தான் ஜெயம்ரவி ஹீரோ. உண்மையில் அமீர்தான் ஹீரோ. ஒரு இயக்குனர் ஒரு கதாநாயகனை எப்படிவேண்டுமென்றாலும், வடிவமைக்கலாம் என்பதற்கு இந்த திரைப்படமும் உதாரணம். ஜெயம் ரவியை கசக்கிபிழிந்து நடிப்பை வாங்கியிருக்கிறார். அதிலும், இண்டாம் பகுதியில் வரும் மும்பை பகவான் “ரவி”யின் நடிப்பு கலக்கல். பல இடங்களில் மிகைபடுத்தபட்ட நடிப்பு என்றபோதிலும், சவாலை ஏற்றுக்கொண்டு திறம்பட நடித்திருக்கிறார். அதுஎன்னவகை கதாபாத்திரம் என்று திரையில், பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இரண்டாம் பாதி மும்பை பகவான் இருந்திருக்காவிட்டால், படத்தில் ஹீரோவுக்கு பதில், ஹீரோயின்தான் பேசபட்டு இருப்பார். நீதுசந்திரா நடிப்பில் உச்சம் தொடுகிறார். மென்மையான காதலை வெளிகாட்டும் அதேமுகத்தில், ஒரு ஏமாற்றுக்காரியாக வில்லத்தன உணர்ச்சிகளையும் ஒருங்கே கொண்டுவந்து, மிரட்டுகிறார். ஹீரோவுக்கு சமமான பங்கு கதையில், ஹீரோயினுக்கும் வழங்கபட்டிருக்கிறது. முதல்பாதியில், ஜெயம்ரவிக்கு உணர்ச்சிகளை படத்தில் வெளிகாட்டமுடியாமல் இருக்கிறது என்பதை, நீதுசந்திரா பக்கத்திலிருந்தே காட்டிகொடுத்துவிடுகிறார். இரெண்டாம் பாதியில், நீதுசந்திராவைவிட, ஜெயம்ரவி கலக்குகிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், இறுதிவரை, இவர்கள் இருவரையும் சுற்றித்தான் கதையிருக்கும். அதனால், மற்றைய கதாபாத்திரங்கள் எதுவுமே நம்மை ஈர்க்கவில்லை என்றே சொலல்லாம்.

படத்தில் பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை. பாடல்கள் இருந்தாலும் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பாடல்களை வைத்து, படத்தை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்திருக்கிறோம் என்று, அடிக்கடி நினைவுபடுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். போதாகுறைக்கு ஒரு பாடலில் கிழவி சாக்ஸ்சியை ஆடவைத்தும் கடுப்பாகுகிறார்கள். இடையில், மட்டும் யுவன் தனது ட்ரேட்மார்க் இல்லாமல், போககூடாதென்று ஒரு காதல்பாடலை தமிழில் கேட்டுவாங்கியிருக்கிறார் போல! படத்தில், காதல்பாடல் வரும்காட்சிகள் ஒட்டவில்லை. யுவன் தாதா படங்களின் பிண்ணனி இசையில், கில்லாடி என்று எல்லோருக்குமே தெரியும். அதற்க்கு, ஏற்றால்போல பின்னணி இசையில் தன்வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அதிலும், மும்பை பகவான் தோன்றும் சண்டைகாட்சிகளில் பிண்ணனி இசை கச்சிதம். ஆனால், அடிக்கடி சரக்கு தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்தி கொண்டிருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் மேக்கிங். இந்தவகைபடங்களுக்கு எந்தவகை மேக்கிங் தேவையோ அதை வழங்கியிருக்கிறார்கள். எடிட்டிங்கில் S.P அகமது தனது திறமையை காட்டியிருக்கிறார். முதல்பகுதியை என்னும்கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் நல்லதாக இருந்திருக்கும். இரெண்டாம் பகுதியில், படத்தை பற்றி குறைசொல்லவென எதுவுமில்லை சில லாஜிக் மீறல்களை தவிர.....! பாங்காங்கின் பார்க்காத அல்லது உண்மை நிலையை படம்போட்டு காட்டி இருக்கும் கமெராமேன் கே. தேவராஜ்க்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளர் நிலைதான் படமுடிவில் சிரிப்பாய் சிரித்திருக்கும் என்று தெரிகிறது.

அமீரின் ஆதி-பகவனை பொறுத்தவரையில், தமிழ்சினிமாவுக்கு இரேட்டைவேடம் ஏற்கும் ஹீரோயிச கதைகளுக்கு புதிய கதைக்களம்தான். ஆனால், படத்தின் வேகம், ரசிகர்களுக்கு ட்விஸ் வைக்கிறேன் என்று அமீர் வைத்த சில ட்விஸ்க்கள் கொஞ்சம் பழசானவை என்பதனாலும், ஆங்காங்கே அமீர் தனது ஸ்டைல் என்று சொல்லி, பாடாய்படுத்தும் காட்சிகளையும் வைத்து படத்தின் அதிரடியை குறைத்து சாதாராண படத்தை தந்திருக்கிறார்.

ஹிந்திசினிமா வரவர தெலுங்கு சினிமாபக்கமாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், ஹிந்திசினிமாவின் இடத்தை பிடித்துகொள்ள அல்லது அந்த இடத்தை நிரப்ப தற்போதைய தமிழ்சினிமா மும்முரமாக உள்ளது என்பதற்கு ஆதி-பகவனும் ஒரு சான்று.

அமீரின் ஆதி-பகவன் – பார்க்கலாம்

Comments