இன்றைய நிலையில் மிகப்பெரிய விடயமாக எல்லோராலும் பேசப்படும் கிரிக்கெட்
சார்ந்த விடயமேன்றால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை தனது நட்சத்திர வீரர்களுள்
ஒருவரான சேன் வாட்சனை சம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு இடைநடுவே மீளவும் நாட்டுக்கு
திரும்புமாறு அறிவித்திருக்கின்றமையே! அதுவும், தென்னாபிரிக்கா அணிக்கெதிரான
டெஸ்ட்போட்டிகளே முதலில் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில், குறிப்பாக வாட்சனை
திரும்ப அலைத்ததமை என்பது மிக அதிகளவில் பேசப்படும் விடயமாக உள்ளது எனலாம்!
அந்தளவுக்கு வாட்சன் முக்கியமானவராக மாறிப்போக காரணம் என்ன?
சேன் வாட்சன் தவிரவும், ஆஸ்திரேலியா அணி இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில்
விளையாடிய பல வீரர்கள் எண்ணமும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ந்தவண்ணம்
இருக்க, என்னும் ஒரு சில போட்டிகளுடன் வாட்சன் சொந்தநாட்டுக்கு திரும்பப்
போகிறார்! அந்தளவுக்கு அவருக்கான முக்கியத்துவத்தை இம்முறை இலங்கையில் இடம்பெற்ற
டுவென்டி டுவென்டி போட்டிகளிலான திறமை வெளிப்பாடுகள் வழங்கியிருக்கிறதா? அல்லது
அந்த பெறுபேறுகள் சம்பியன்ஸ்லீக் வரை தொட்ருவதன் காரணமாக, அவரை அப்படியே
தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை பயன்படுத்தி கொள்ள
நினைக்கிறதா? என்பதே பலரதும் கேள்வி!
மூன்றே டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியுடன்
விளையாட இருக்கின்ற நிலையில், இந்த அழைப்பு எந்த வகையில் முக்கியத்துவம்
பெறுகிறது? என்று சிந்திக்கலாம். நிச்சயம் தென்னாபிரிக்காவுக்கு தைமகள்
முதலாமிடத்தை தக்கவைத்து கொள்ளவும், ஆஸ்திரேலியா மீளவும் தங்கள் பலத்தை நிரூபித்து
கொள்ளவும் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட இருநாடுகளுக்குமிடையிலான
ஒரு பனிப்போராக இம்முறை போட்டிகள் அமையப் போகிறது! எனவே, அதற்காகவே தனது தற்போதைய
சிறந்த நிலையில் உள்ள வீரர்களை அதே சமபல உடற்தகுதியுடன் டெஸ்ட்தொடரில் பங்குபற்ற
வைத்து அவர்கள் மூலமாக, சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள ஆஸ்திரேலியா நிர்வாகம்
எதிர்பார்க்கிறது!
சேன் வாட்சனின் 2012ம் ஆண்டுக்கான டெஸ்ட் தரவுகளை பார்க்கும் போது, 3 டெஸ்ட்
போட்டிகளில் பங்குபற்றி 193 ஓட்டங்களை ஒரு அரைசதத்துடன் பெற்று உள்ளதுடன், கடந்த
வருடம் 6 டெஸ்ட் போட்டிகளில் 285 ஓட்டங்களையும், 14 விக்கெட்களையும் சாய்த்து ஒரு
சராசரி டெஸ்ட் சகலதுறை வீரராகவே, தன்னை வெளிகாட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.
2012ம் ஆண்டின் ஆரம்ப டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணிக்கெதிரான போட்டிகளில் இவர்
பங்குபற்றியிருக்காத போது, ஆஸ்திரேலியா அணி அந்த டெஸ்ட் தொடரை 4-0 என்ற
ரீதியிலும், பின்னர் 2012ம் ஆண்டில் சேன் வாட்சன் அணியுடன் இணைந்து
மேற்கிந்தியதீவுகள் அணிக்கெதிராக பங்குபற்றிய போட்டியில், 2-0 (ஒரு போட்டி சமனிலை
முடிவு) என்ற வெற்றியையும் பெற்று கொண்டது! இந்த தொடரில், சேன் வாட்சன் என்ற
தனிமனிதனின் பெறுபேறுகள் தனித்து எந்த வகையிலும் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய அளவில்
உதவியிருக்கவில்லை என்றே கூறலாம்! அது போல, தென்னாபிரிக்கா அணிக்கெதிராக இரண்டு
டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க கூடிய இவர், முதலாவது போட்டியின் முதலாம்
இன்னிங்க்ஸில்,5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தாலும், அந்த போட்டியில் ஆஸ்திரேலியா
அணி மொத்தமாக 47 ஓட்டங்களை இரெண்டாம் இன்னிங்க்ஸில் பெற்று தோல்வியடைந்தமையை
யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அது தவிரவும், பெரிதாக இந்த இரண்டு டெஸ்ட்
போட்டிகளில் வாட்சன் பிரகாசித்து இருக்கவில்லை. இப்படியான நிலையில், டெஸ்ட்
போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் ஜந்து இடங்களுக்குள்
ஒருவராக இருக்க கூடிய சேன் வாட்சன், சம்பியன்ஸ்லீக் போட்டிகளில் பங்குபற்றி வரும்
ஏனைய சிறந்த டெஸ்ட் வெளிப்பாடுகளை கொண்ட வீரர்களுக்கு மத்தியில் தனியாக நாட்டுக்கு
அழைக்கப்பட்டது சரிதானா? என்று எண்ணத் தோன்றும்!
இவற்றுக்கு அப்பால், சேன் வாட்சன் தொடர்பில் இவ்வளவு தரவுகளை நீங்கள்
பார்த்தாலும், சேன் வாட்சன் என்கின்ற தனிமனிதனின், இலங்கையில் இடம்பெற்ற டுவென்டி
டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளிலான அதிரடி ஆட்டமும், சகலதுறை பந்துவீச்சுமே உங்கள்
கண்முன் வந்து போயிருக்கும்! ஏன், பல சந்தர்ப்பங்களில் அவரது வேறுபட்ட போட்டிகளிலான
பெறுபேறுகளும் நினைவுக்கு வந்திருக்கும்! காரணம், சேன் வாட்சனின் சகலதுறை
வெளிப்பாடே! தரவுகளுக்கு அப்பாலும், அணிக்கான முக்கிய தருணங்களில் அவரது திறமை
பரவலாக ஆஸ்திரேலியா அணிக்கு பயன்பட்டு இருக்கிறது! இந்த நிலையில், மிக சிறந்த
போர்ம் நிலையில் உள்ள ஒருவரை ஆஸ்திரேலிய நிர்வாகம் இழக்க விரும்பாது! அதுவும்,
சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அவர் காயமடைந்தால், ஆஸ்திரேலியாவின் டெஸ்ட்
தரவரிசையில் முன்னேற்றம் காணுவதற்கான தென்னாபிரிக்கா போட்டி தொடரில் அது மிக பெரிய
பலவீன நிலையை உருவாக்கிவிட கூடும் எனவேதான் இந்த முன்னேற்பாடு என்றும் பரவலாக
சொல்லப்படுகிறது! என்ன இருந்தாலும், இத்தகைய பாரிய தற்பாதுகாப்பு முடிவு சரியானதா?
இல்லையா? என்பதற்கு பதில் சொல்லப்போவது, வாட்சனின் சகலதுறை வெளிப்பாடேயன்றி வேறு
எதுவுமில்லை.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை என்னும் சேன் வாட்சன் மேலும் சாதிக்க
வேண்டியிருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கான சிறந்த களமாகவும், தென்னாபிரிக்க
தொடர் அமைய போகிறது சேன் வாட்சனுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலியா அணிக்கும் கூட!
பின்குறிப்பு - கடந்த வாரம் SPORTSKALAM இணையதளத்துக்கு எழுதி, உங்களுடன் பகிர மறந்து போன ஆக்கம் இது! நேரமிருந்தால் இதையும் படியுங்கள்!

